நூறாண்டுகளுக்கு முன் (31.07.1921), மகாகவி பாரதியார் தனது கடைசி உரையை நிகழ்த்திய இடத்தை புகைப்படத்தில் காணலாம். 1921 ல் வாசக சாலையாக இருந்து தற்போது அரசு நூலகமாக இருக்கும் #ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்தில்தான் "மனிதனுக்கு மரணமில்லை" ("MAN IS IMMORTAL") எனும் தன் வரலாற்று சிறப்புமிக்க இறுதி உரையை பாரதியார் நிகழ்த்தியுள்ளார். ஈரோட்டின் பெருமைகளில் ஒன்று. 1921ல் நடந்த வரலாற்று நிகழ்வுக்கு பின் 100 ஆண்டுகள் கடந்து 2021ல் அங்கு சென்றது பெரும்பேறு.
கீழ்காணும் இந்த கவிதையின் சாரம்தான் பாரதியார் கருங்கல் பாளையம் நூலகத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.
பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!










Comentários