top of page
Search
Writer's pictureVANITHAMANI C

#கோவைவானொலி நிலையத்தின் சிறுமியும் #திருச்சிவானொலி நிலையத்தின் அத்தையும்

(#கோவைவானொலி நிலையத்தின் சிறுமியும் #திருச்சிவானொலி நிலையத்தின் அத்தையும்) வானொலி ஓர் கருவி அல்ல என் வாழ்வின் ஓர் உணர்வு குறியீடாகும். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" "இறைவனிடம் கையேந்துங்கள்" "மாதவின் கருணை" சிறுவயதில் மேற்கண்ட 3 விதமான பாடல்களில் ஒன்றுதான் எங்களை நாள்தோறும் காலை ஆறு மணிக்கு எழுப்பும் ஒலி. அதன் பின் 6.40 மாநிலச் செய்திகள் போட்டதும் அப்பா சைக்கிள் எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பியாக வேண்டும். 8.30க்கு நேயர் விருப்பம் பாடல்கள் ஒலிக்கும்போது நாங்கள் பள்ளிப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி நடந்தால் பள்ளியை அடைய சரியாக இருக்கும். பள்ளியில் மதியம் 12.30 க்கு சாப்பிட மணி அடித்தவுடன் ஓட்டம் துவங்கி வீட்டில் நிற்கும் போது சரோஜ் நாராயணசாமியின் குரலில் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அதன்பின் வரும் கூட்டிசைப் பாடல் அற்புதமாக இருக்கும். அது துவங்கியதுமே பள்ளிக்கு கிளம்பினால்தான் சரியாக இருக்கும். மாலை 4 மணிக்கு வீட்டுக்குள்ளேயே வராமல் பையை தூக்கி வீட்டுக்குள் விட்டெறிந்துவிட்டு விளையாடப் போறேன்மா எனக்கத்திவிட்டு நட்புகளோடு தெருப்புழுதியோடு திரிவதுதான் வாடிக்கை. ரேடியோவில் அப்போது என்ன நிகழ்வுகள் ஒலிபாரப்பாகுமென தெரியாது. அதன் பின் மாலை 6மணிக்கு பக்தி இசையோடு துவங்கும் நிகழ்வுகள், விவசாய செய்திகள், நாடகங்கள், மெல்லிசை, மாநில, மாவட்ட செய்திகள், இரவின் இசை போன்றவை ஒலிப்பரப்பாகும். கோவை வானொலியின் சூலூர்கணேஷ், திரிபுரசுந்தரி , தாமரை மணாளன், செல்வலட்சுமி, போன்றோரின் குரல் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது போலத்தான் கிட்டதட்ட எங்கள் வீட்டு ரேடியோ இருக்கும். அதன் மேல் தினமும் ஒரு சிவப்பு செம்பருத்திப் பூவை வைத்துவிடுவேன். ரேடியோவுக்குள் குட்டி குள்ள மனிதர்கள் பசியாய் இருப்பார்களே என எண்ணிய நான் ரேடியோவில் சிறு ஓட்டை போட்டு சோற்று பருக்கைகள், பொரி எல்லாம் போட்டுக் கொண்டே இருந்து ஒரு நாள் தாகத்துக்கு என்ன செய்வார்கள் என யோசித்து(அப்பவே!) வெங்காயச் செடியின் தாளினை சொருகி சில சொட்டுக்கள் தண்ணீர் விடும் போது கை நடுங்கி அரை டம்ளர் தண்ணீர் உள்ளே போய்விட்டது ...... பின்னர் ரிப்பேரும் ஆகிவிட்டது......அதை சரிசெய்ய பிரிக்கும் போது சொன்னார்கள், உள்ள யாரும் இல்ல பாரு. வானொலி நிலையத்தில் இருந்து பேசுவார்கள் அலைவரிசையில் இப்படி இப்படி செயல்படுதுன்னு. அறிவியல் ரீதியா பெரிசா புரியல. ஆனா ரேடியோக்குள்ள யாருமில்லன்னு புரிஞ்சது. புகைப்படத்திலிருக்கும் #திருச்சிவானொலி நிலையக் கடிதம் இவ்வளவு அழகிய நினைவுகளை கிளறிவிட்டது. சிறுமியாய் வானொலி நிகழ்வுகளை ரசித்தவள் இன்று "வந்துட்டாங்க வனி அத்தை " எனும் நிகழ்வு மூலம் குழந்தைகளை தொடர்ந்து சந்திப்பது பெருமகிழ்வும் நிறைவுமான பொழுதுகளாகும். ஆதலால் .... வானொலி ஓர் கருவி அல்ல என் வாழ்வின் ஓர் உணர்வு குறியீடாகும். - சி. வனிதாமணி அருள்வேல் கதைக்களம் - ஈரோடு





70 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page